'நல்லதே நினை; நல்லதே செய்; நல்லதே நடக்கும்'

இது நான் முன்பு பணிபுரிந்த எங்கள் துறையின் தலைமையலுவலகத்தின் நுழைவாயிலில், வெளியேறும்போது கண்ணில் படும்படி எழுதிவைக்கப்பட்டிருக்கும் ஒரு வாசகம். நேர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருக்கும் இது, நான் பணிசேர்ந்த ஆரம்ப நாள்களில் என்னை மிகவும் ஈர்ப்பதாக இருந்தது. நாள்தோறும் தவறாமல் இதை வாசித்துக் கொண்டிருந்த எனக்குத் திடீரென ஒருநாள் இவ்வாசகத்தைக் கட்டுடைக்கும் ஆவல் தோன்றியது. முதல்நோக்கிலேயே எல்லோரையும் ஈர்த்துவிடும் இவ்வாசகம் உண்மையில் என்ன சொல்கிறது என்பதை நான் கட்டுடைத்த பின்னணியைத் தற்போது உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

அதற்கு முன்பாக 'கட்டுடைத்தல்' என்றால் என்ன என்பது பற்றி ஒரு சிறிய அறிமுகம். பலரும் இதை அறிந்திருக்கக் கூடும் என்றாலும் அறியாதவர்களுக்காக மட்டும் இவ்வறிமுகம்.

ஆங்கிலத்தில் De-construction எனப்படும் கட்டுடைத்தல் என்னும் கருத்தாக்கம் ழாக் தெரிதா (1930-2004) என்ற பிரெஞ்ச் சிந்தனையாளரால் தோற்றுவிக்கப்பட்டது. இவர் பின்நவீனத்துவத்தின் தொடக்க காலச் சிந்தனையாளர் ஆவார். பின்நவீனத்துவ எழுத்தாளரான எம்.ஜி.சுரேஷ் இதை நிர்-நிர்மாணம் என்கிறார். வேறு சிலர் தகர்ப்பமைப்பு என்றும் கட்டவிழ்ப்பு என்றும் சொல்கிறார்கள். நாம் இங்கே கட்டுடைத்தல் என்றே கூறுவோம். காரணம், கட்டு என்பது அடிமைத் தளையையும் குறிப்பதால் அதை உடைத்தல் என்ற இன்னொரு பொருளும் இதில் தொனிப்பதால் இதையே நாம் தெரிவு செய்வோம். இக்கட்டுரையின் இறுதியில் இத்தெரிவின் நியாயத்தை, முழுமையை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் எனவும் நம்புகிறேன்.

ஒரு கட்டடம் எவற்றால் கட்டப்பட்டிருக்கிறது என்பதை அறிய (பொதுவாக நாம் அறிந்திருப்போம் என்றாலும், அதை ஐயத்திற்கிடமின்றி நிறுவ) அக்கட்டடத்தைத் தகர்க்க வேண்டும். அவ்வாறே, மொழியில் ஒரு உரையாடலின் உண்மையான உள்ளர்த்தத்தை அறிய அவ்வுரையாடலையும் தகர்க்க வேண்டும். இதைத்தான் கட்டுடைத்தல் என்ற பின்நவீனத்துவ, பின் அமைப்பியல் சொல்லாடலாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது கட்டுடைப்பைத் தொடங்குவோம்.

'நல்லதே நினை; நல்லதே செய்; நல்லதே நடக்கும்'

கட்டுடைத்தலின் முதற்படியாக இதன் வாக்கிய அமைப்பைச் சற்றே கவனிப்போம்.

இதன் முதல் பகுதி
'நல்லதே நினை' - இது ஒரு ஏவல் அல்லது கட்டளை வாக்கியம்.

அடுத்த பகுதி
'நல்லதே செய்' - இதுவும் ஒரு ஏவல் அல்லது கட்டளை வாக்கியம்.

கடைசி பகுதி
'நல்லதே நடக்கும்' - இது ஒரு நேர்மறை வாக்கியம்.

ஆக, இரண்டு ஏவல் வாக்கியங்களையும், ஒரு நேர்மறை வாக்கியத்தையும் ஒருங்கே கொண்டிருக்கும் இவ்வாசகம் ஒட்டுமொத்தத்தில் இலக்கணப்படி ஒரு தொடர்வாக்கியம் ஆகும்.

இப்போது இதிலுள்ள இரு ஏவல் வாக்கியங்களின் மீது நமது கேள்விகளை எழுப்புவோம்.
  1. ஏவுபவர் யார்? (தன்மை)
  2. ஏவப்படுபவர் யார்? (முன்னிலை)

இதில் முதல் கேள்விக்கான பதிலைக் கண்டடைய, 'யாரால் ஏவ முடியும்?' என்ற துணைக் கேள்வியை நாம் எழுப்பிக் கொள்வது நல்லது. அதிகாரம் தொழிற்படும் ஒரு அமைப்பில் அதிகாரத்தின் மேல்நிலையில் உள்ள ஒருவர் அதிகாரத்தின் கீழ்நிலையில் உள்ள ஒருவரை அல்லது அதிகாரமற்ற ஒருவரை ஏவ முடியும் என்பதாக இதற்கு நாம் பதில்காண முடியும். காட்டாக, ஒரு அரசமைப்பில், அரசின் உயர்நிலையில் இருக்கும் பிரதமர் அல்லது குடியரசுத் தலைவர் (இது நாட்டுக்கு நாடு மாறுபடும்) தனக்குக் கீழேயுள்ள அமைச்சர்களையும், அமைச்சர்கள் தங்களுக்குக் கீழேயுள்ள அலுவலர்களையும், அவ்வலுவலர்கள் அவர்களுக்குக் கீழேயுள்ள இதர அலுவலர்களையும் ஏவ முடியும். இது அவ்வமைப்பின் கடைநிலை ஊழியரில் முடியும்.

இவ்வாறே, இது மாநில அரசுகள், துறைகள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் என அதிகாரம் தொழிற்படும் அனைத்து இடங்களுக்கும் பொருந்தும். இது குடும்பம் என்ற அமைப்பிற்கும் பொருந்தும் என்றாலும், குடும்ப உறுப்பினர்களுக்குள் ஓர் உறவு கட்டமைக்கப்பட்டிருப்பதால் இந்த ஏவல் என்பது அவ்வப்போது சூழலுக்கேற்ப மாறும் தன்மையுடையது என்பதை நாம் வேறுபடுத்தி அறிந்து கொள்ள வேண்டும்.

எனவே, பொதுவாக இந்த ஏவல்கள் அதிகாரத்தில் மேல்நிலையில் உள்ளவர்களால் அதிகாரத்தின் கீழ்நிலையில் உள்ளவர்கள் அல்லது அதிகாரமற்றவர்கள் மீது ஏவப்பட்டிருப்பதாக நாம் புரிந்து கொள்ளலாம்.

மேலும், இவ்வாக்கியங்களிலுள்ள 'நல்லதே' என்ற சொல்லின் ஈற்றிலுள்ள ஏகாரம், நல்லதைத் தவிர்த்த மற்றதை அதாவது தீயதையும் மறைபொருளாகக் குறிப்பிடுகிறது. அது, 'தீயதைச் செய்யாதே', 'தீயதை நினையாதே' என்ற மேலுமிரு ஏவல்களையும் குறிப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். அதாவது, 'நல்லது செய்', 'நல்லது நினை' என்று ஏவாமல், 'நல்லதே செய்', 'நல்லதே நினை' என்று ஏவுவதன் மூலம் 'தீயதைச் செய்யாதே', 'தீயதை நினையாதே' என்பவற்றையும் மறைமுகமாக ஏவுவதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

இப்போது வாசகத்தின் இறுதிப் பகுதியான 'நல்லதே நடக்கும்' என்பதைக் கட்டுடைப்போம். முன்னர்க் குறிப்பிட்டது போல இவ்வாக்கியத்திலும் 'நல்லதே' என்ற சொல்லின் ஈற்றிலுள்ள ஏகாரம், நல்லது மட்டுமே நடக்கும் என உறுதியளிக்கிறது. மேலும், தீயதைச் செய்தால், தீயதை நினைத்தால் தீயதே நடக்கும் எனவும் மறைமுகமாக எச்சரிக்கிறது.

இப்போது இவ்வாசகம் குறிப்பிடும் நல்லது, தீயது குறித்துச் சிந்திப்போம். இவ்வாசகத்தின்படி எது நல்லது, எது தீயது, யாருக்கு நல்லது செய்ய வேண்டும், யாருக்குத் தீயது செய்யக் கூடாது என்ற கேள்விகளை எழுப்பும்போது, நல்லது செய்வது என்பது நாம் எந்த அதிகார அமைப்பில் இருக்கிறோமோ அவ்வமைப்பின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, அவ்வமைப்புக்கெதிராக எதுவும் நினையாதிருப்பது, பேசாதிருப்பது மற்றும் செய்யாதிருப்பது எனப் புரிந்து கொள்ளலாம். அவ்வாறே, தீயது செய்வது என்பது அவ்வதிகார அமைப்பின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படாமல், அவ்வமைப்பைக் குலைக்க முயலுவது, எதிர்ப்பது, கலகம் செய்வது மற்றும் புரட்சி செய்வது என்றும் புரிந்து கொள்ளலாம்.

ஆக, ஒரு அதிகார அமைப்பு இதுபோன்ற நன்னெறி வாக்கியங்கள் என நம்பப்படும், தனது அதிகார குரல் ஒலிக்கும் ஏவல் வாக்கியங்களைத் தொடர்ந்து பரப்புரை செய்வதன் மூலம் அவ்வமைக்குட்பட்டவர்களை, அவ்வமைப்புக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கிறது. அதற்குப் பதிலாக சில வெற்று வாக்குறுதிகளைப் பரிசாக அவர்களுக்குத் தரும் அவ்வமைப்பு எதிர்ப்பவர்களைத் தண்டனைக்குள்ளாக்கவும் செய்கிறது.

இப்போது ஒரு சிலர் மனத்தில் தோன்றலாம், இது என்ன அபத்தமென்று. நல்லதைச் செய்வதையும் நினைப்பதையும் நிறுத்திவிட வேண்டுமா என்றும் அவர்கள் கேள்வியெழுப்பலாம். நல்லது செய்வது தொடர்பான மாற்றுச் சிந்தனையை அடுத்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

'நல்லதே நினை; நல்லதே செய்; நல்லதே நடக்கும்' எனச் சொல்வதில் என்ன தவறிருக்க முடியும் என்று இன்னமும் நினைப்பவர்களுக்காக இந்த வாசகம் எப்படியிருக்க வேண்டும் என்று இப்போது பார்ப்போம்.

'நல்லதே நினைப்போம்; நல்லதே செய்வோம்; நல்லதே நடக்கும் என்று நம்புவோம்'

இந்த வாசகத்தைக் கவனியுங்கள். இதில் ஏதாவது ஏவல் தொனி தெரிகிறதா? இல்லவே இல்லை. ஏதேனும் அதிகாரப் படிநிலையை உங்களால் உய்த்துணர முடிகிறதா? வாய்ப்பே இல்லை. காரணம், இதில் சொல்பவன், யாருக்குச் சொல்லப்படுகிறதோ அவர்களோடு ஒன்றிணைந்து விடுகிறான். அதிகாரம் தகர்க்கப்பட்டு சமனிலை நிறுவப்படுகிறது. மேலும், இவ்வாசகம் சமத்துவத்திற்கான அழைப்பாகவும் இருக்கிறது. அது நல்லதே நடக்கும் என்று எந்தவொரு வெற்று வாக்குறுதியையும் அளிக்கவில்லை. மாறாக, நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை விதையைத் தூவுகிறது. அந்த நன்மையும் எந்த ஒரு அதிகார அமைப்புக்கான நன்மையாகவும் இல்லை. அது எனக்கான நன்மையைச் சொல்கிறது; உங்களுக்கான நன்மையைச் சொல்கிறது; மொத்தத்தில், ஒட்டுமொத்த மனிதச் சமூகத்தின் நன்மைக்கான அறைகூவலாய் அது இருக்கிறது.

ஆகவே, ஆளும் அதிகார வர்க்கத்தினரின் ஏவல் நன்னெறி வாக்கியங்களிலிருந்து எச்சரிக்கையுடன் விலகியிருப்போம். அவற்றின் அதிகாரத் தொனியைக் கட்டுடைத்து சமத்துவமான புதிய சொல்லாடல்களைக் கட்டுவோம்; மாற்றிச் சிந்திப்போம்.

.


0 Responses

Post a Comment