முந்தைய கட்டுரையில் 'நல்லதே நினை; நல்லதே செய்; நல்லதே நடக்கும்' என்ற வாசகத்தைக் கட்டுடைத்து அதனை 'நல்லதே நினைப்போம்; நல்லதே செய்வோம்; நல்லதே நடக்கும் என நம்புவோம்' எனப் புதிதாகக் கட்டமைத்தோம். அக்கட்டுரையின் இறுதியில் நல்லது செய்தல் குறித்து அடுத்த பகுதியில் விவாதிப்பதாகக் குறிப்பிட்டிருந்தேன். அதனை இப்போது காண்போம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு வாசகங்களில் முதலாவதில், நல்லதை நினைத்து, நல்லதைச் செய்தால் நல்லது நடக்கும் என உறுதிபடக் கூறப்பட்டிருக்கிறது. இரண்டாவதில், நல்லதை நினைத்து, நல்லதைச் செய்தால் நல்லது நடக்கும் என நம்பலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இவை சொல்வதெல்லாம் உண்மையென நீங்கள் நம்புகிறீர்களா? நல்லதைச் செய்தால் நல்லதும், தீயதைச் செய்தால் தீயதும் நடக்கும் என்பதற்கு ஏதேனும் உத்தரவாதமுண்டா? நல்லது செய்பவர்களுக்கு தீயதும், தீயது செய்பவர்களுக்கு நல்லதும் நடந்து கொண்டுதானே இருக்கின்றன. இதை உங்கள் சொந்த அனுபவத்திலும் கூட நீங்கள் கண்டிருக்க முடியுமே! அப்படியானால், இதற்கெல்லாம் அர்த்தம்தான் என்ன? நன்மை செய்தாலும் தீமை நடக்கும் என்றால் நன்மை செய்வதன் நோக்கம்தான் என்ன? நன்மை செய்தல் என்ற விழுமியத்தின் அர்த்தப்பாடு கேள்விக்குரியதா? நன்மையே செய்யக்கூடாதா? இப்படி எண்ணற்ற கேள்விகள் உங்கள் மனத்தில் எழலாம். இதற்கெல்லாம் காரணம் நம் முன்வினைப்பயன்தான் என்று ஒற்றைச் சொல்லில் புரியாத ஒரு தீர்ப்பைச் சொல்வது இக்கட்டுரையின் நோக்கமன்று. அதை நீங்களும் விரும்ப மாட்டீர்கள் என நம்புகிறேன். அப்படியெனில், இக்கட்டுரை புதிய தீர்ப்பைச் சொல்லப் போகிறதா? அப்படி எதுவுமில்லை. இதில் நாம் உரையாடப் போகிறோம்; தேடப் போகிறோம்; அவ்வளவுதான். முடிவு எப்படியிருந்தாலும் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை.

நன்மை, தீமை இவையிரண்டுமே வெவ்வேறு செயல்கள் ஆயினும், அவை பொதுவில் செயல்களே. எந்தவொரு செயலும் அதற்கென ஒரு விளைவை உடனடியாகவோ, தொடர்ச்சியாகவோ தரவல்லது. இதில் நான் நீண்ட கால விளைவைக் குறிப்பிடவில்லை. காரணம், எந்தவொரு செயலும் உடனடியாக விளைவைத் தொடங்கி விடுகிறது. அதன் முழுமையை அடைய நீண்டகாலமானாலும், அது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகவே (process) இருக்கிறது. காட்டாக, ஒரு விதையை நீங்கள் விதைத்தவுடன், அச்செயல் உடனடி விளைவு எதையும் தோற்றுவித்து விடுவதில்லை. நீண்ட காலம் கழித்துத்தான் அது ஒரு மரத்தை உருவாக்குகிறது. அதற்காக, இவ்விளைவு ஒரு நீண்டகால விளைவு என்று முடிவு கட்டிவிட முடியாது. காரணம், நீங்கள் விதையை ஊன்றிய பின் அது முளைவிடுதல், வேர்விடுதல், இலைவிடுதல், கிளைவிடுதல், பூவிடுதல், காய்விடுதல், கனிவிடுதல் (இடையில் நான் ஏதாவது விட்டிருக்கலாம்) எனப் பல தொடர்ச்சியான படிநிலைகளைக் கடந்த பின்னரே அது முழுமையானதொரு மரமாகிறது. மேலும், அது அன்றாடம் வளர்ந்து கொண்டுமிருக்கிறது. எனவே, இதனைத் தொடர்ச்சியான விளைவு என்றுதான் குறிப்பிட வேண்டும்.

இப்பேரண்டத்தையும், அதன் நிகழ்வுகளையும் காதலோடு உற்று நோக்கி வந்தால் பெரும்பான்மையானவை ஏதேனுமொரு செயலின் தொடர்ச்சியான விளைவாகவே இருப்பதை நாம் அவதானித்து விடலாம். இப்பேரண்டத்தின் இப்போதைய நிலையை எதிர்த் திசையில் ஓடவிட்டு (rewind) நம்மால் பார்க்க முடியுமேயானால், அறிவியல் கோட்பாடுகளின்படி ஒரு பெருவெடிப்பையும், மெய்யியல் அல்லது ஆன்மீகக் கோட்பாடுகளின்படி ஏதேனுமொரு கடவுளையும் நாம் சென்றடையலாம் (ஆனால், அவ்வாறு நம்மால் முடியாது. காரணம், எதிர்த் திசையில் செல்லும்போது மனித இனத்தின் தோற்றம் நிகழும் புள்ளிக்கு முன்னால் மனித இருப்பு இருக்கப் போவதில்லை). அதாவது, ஆதிவினையின் தோற்றப் புள்ளியை நாம் அடைந்துவிடலாம்.

ஆகவே, செயல்கள் என்பதை மனிதச் செயல்கள் என்ற ஒற்றைப் பரிமாணத்தில் மட்டுமே நாம் சுருக்கி விடத் தேவையில்லை. வெளி, விண்மீன்கள், கோள்கள், வளிமண்டலம், ஆறுகள், கடல்கள், விலங்குகள், பறவைகள், புழு பூச்சிகள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் என இப்பேரண்டத்தின் அனைத்துப் படைப்புகளின், இருப்புகளின் செயல்கள் என்ற விரிந்த பார்வையை நாம் கொள்ள வேண்டும். இப்போது இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, உயிர்களில் மனிதனைத் தவிர்த்த மற்றையவை தங்கள் செயல்களை நல்லது, கெட்டது எனப் பிரித்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை (இதை உறுதியாகச் சொல்ல இயலாது. தன்னைத் தவிர்த்த மற்றைய உயிர்கள் அறிவில் குறைந்தன என்ற மனித அறிவின் ஆணவப் பார்வையாக இது இருந்தாலும், பொதுவான அர்த்தத்தில் மட்டும் இதை உண்மை என நம்புவோம்). ஆனால், மனிதன் மட்டுமே மொழியால் கட்டமைக்கப்பட்ட தனது சிந்தனை முறையால் செயல்களை நல்லவை, தீயவை என இனம் பிரிக்கிறான்.

எனவே, நல்லவையாயினும், தீயவையாயினும் அவை செயல்கள் என்ற அளவில் ஒன்றே. நாம் செயல்களை மட்டுமே நல்லவை, தீயவை எனப் பெயரிட்டுப் பிரித்துச் செய்ய முடியும். விளைவுகள் நமது கட்டுப்பாட்டில் இல்லையென்பதால் அவை நல்ல விளைவுகளாகவோ, தீய விளைவுகளாகவோ இருக்கலாம். அதிலும் விளைவுகளை நாம்தாம் நல்லவை, தீயவை என வகைப்படுத்திப் பார்க்கலாமேயொழிய, விளைவுகளைப் பொருத்தவரை தம்மளவில் அவை வெறும் விளைவுகளே.

சுயநலமிக்க மனித இனம் உடனடியாகத் தனக்கு நன்மை நிகழும் விளைவுகளை மட்டுமே கருத்தில் கொண்டு, தொடர்ச்சியான விளைவுகளின் மீது கவனமற்றுப் போய் அழகான இப்புவியைக் குலைத்து வருகிறது. குழந்தை அடித்தால்தான் படிக்கிறது எனச் சொல்லிக் கொள்ளும் பெற்றோரைப் பொருத்தவரை, அடித்தல் என்னும் செயல் நல்ல செயல். அது உடனடியாகக் குழந்தை படித்தல் என்னும் தாங்கள் விரும்பும் நல்ல விளைவை உண்டக்குவதால் அவர்களுக்கு மகிழ்ச்சி. அவ்வாறு குழந்தையை அடிப்பதன் நீண்டகால விளைவாக அக்குழந்தை தன் வாலிப வயதில் முரட்டுத்தனம் மிக்கதாக மாறிவிடும் என்பதையோ, தங்களை முதுமையின் போது கைவிட்டு விடும் என்பதையோ அவர்கள் உணரத் தலைப்படுவதில்லை. அதே சமயம் அக்குழந்தை தன்னை அடிப்பதை நல்ல செயலாக ஏற்றுக் கொள்வதில்லை. மேலும், முதுமையின் போது பெற்றோரைக் கைவிடுவதை கெட்ட செயலாகவும் கருதுவதற்கு இடமில்லை. ஆக, இங்கே நல்ல செயல், கெட்ட செயல் என்பவை மனிதர்களைப் பொருத்து சார்புத் தன்மையைப் பெற்று விடுகின்றன.

எங்கள் ஊரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் போதெல்லாம் அங்கு வரவேற்பறையில் ஒரு கண்ணாடித் தொட்டியில் ஒரு பெரிய வண்ணமீன் சிரமப்பட்டு நீந்திக் கொண்டிருப்பதைக் கவனிப்பேன். வாஸ்து என்ற பெயரில் ஒரு உயிரை அதன் இயல்பிடத்திலிருந்து விலக்கி தனது வரவேற்பறையில் வைத்து வாட்டிக் கொண்டிருக்கும் மனித செயலைக் கண்டு மனம் மிக வருந்துவேன். அப்போதெல்லாம் எனக்கு ஒன்று தோன்றும். இந்த மீனை எப்படியாவது விடுவித்துக் கடலில் கொண்டு சேர்த்துவிட வேண்டுமென்று. அப்படியொரு நாள் அந்த மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது இதே சிந்தனை அப்போதும் எனக்குத் தோன்றியது. மேலும், கூடுதலாக ஒரு சிந்தனையும் தோன்றியது. அதாவது, நான் அந்த மீனைக் கடலில் கொன்டு போய் விட்டதும் அந்த மீனை வேறொரு பெரிய மீனோ, திமிங்கிலமோ தின்று விட்டால் என்னாவது என்று தோன்றியது. என்னைப் பொருத்தவரை அந்த மீனை விடுவிப்பது ஒரு நல்ல செயலாக இருக்கலாம். உடனடி விளைவாக அச்செயல் அம்மீனுக்குச் சுதந்திரத்தையும், எனக்கு மகிழ்ச்சியையும் கொடுத்து விடலாம். ஆனால், தொடர்ச்சியான விளைவாக அந்த மீன் வேறொரு மீனுக்கு இரையாகி விட்டால் நான் செய்த செயல் எப்படி நல்ல செயலாக இருக்க முடியும்? மருத்துவமனையிலேயே இருந்திருந்தால் குறைந்த பட்சம் அம்மீன் உயிரோடாவது இருந்திருக்குமே. அப்படியானால், அந்த மீனின் சுதந்திரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற என் எண்ணம் தவறா? இல்லை. சிந்தித்துப் பார்த்தால் இதெல்லாம் அம்மீனைக் கடலிலிருந்து பிடித்தவனின் செயலின் தொடர்விளைவுகள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். அவன் அம்மீனைப் பிடித்திருக்காவிட்டால் அதை மருத்துவர் தன் மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருக்க மாட்டார் (வேறு யாரிடமாவது வாங்கியிருப்பார் எனச் சொல்லக் கூடாது. நான் சொல்வது வண்ண மீன்களை யாருமே பிடித்து விற்கக் கூடாது என்ற பொருளில்); அவர் கொண்டு வந்திருக்காவிட்டால் எனக்கு அதை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்காது; பின்னர் அதைக் கடலில் கொண்டு போய் விட்டிருக்க மாட்டேன்; அதை இன்னொரு மீன் தின்றிருக்காது; எனக்குக் குற்ற உணர்ச்சியும் வந்திருக்காது. நீங்கள் கேட்கலாம், யாரும் பிடித்திருக்காவிட்டாலும் கடலில் அம்மீனை வேறொரு மீன் சாப்பிட வாய்ப்பிருக்கிறதே என்று. உண்மைதான்; ஆனால், அவ்வாறு சாப்பிட்டிருந்தாலும் அது இயல்பான நிகழ்வாகவே இருந்திருக்கும். காரணம், மனிதன் அந்நிகழ்வைக் காண வாய்ப்பில்லாததால் அதனை நல்லது, கெட்டது எனப் பிரித்துப் பார்க்கும் வாய்ப்புமில்லை. மேலும், மீன்களிடம் நல்ல செயல், கெட்ட செயல் எனப் பிரித்துப் பார்க்கும் அறிவில்லை என நம்பப்படுவதால் அவற்றிடம் குற்ற உணர்ச்சியும் இருந்திருக்காது.

நம்மைப் பொருத்தவரை விளைவுகளைப் பொருத்து நமது செயல்களை நல்ல செயல்கள் என்றும் தீய செயல்கள் என்றும் நம் அறிவுக்குட்பட்டுப் பிரித்து வைக்கிறோம். ஆனால், அச்செயல்கள் மூலம் குறிப்பிட்ட விளைவுகள் கிட்டாதபோது நாம் ஏமாற்றமடைகிறோம். இதற்குக் காரணம் விளைவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாததுதான். விளைவுகளைத்தான் நம்மால் கட்டுப்படுத்த முடியாதேயொழிய நமது செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

எனவே, நல்லவை, தீயவை என்பதையெல்லாம் தாண்டி நாம் செய்யும் செயல்களின் மீது மிகுந்த விழிப்புணர்வோடிருந்தால் அதுவே இப்பேரண்டத்திற்கு நாம் ஆற்றும் நமது பங்காக இருக்கும். போகிறபோக்கில் சாலையோரம் நாம் துப்பிவிட்டுப் போகும் எச்சில் கூட நோய்க்கிருமிகள் இருக்கும் நிலையில் பலருக்கும் நோயைப் பரப்பி விடும் என்பதால் நமது ஒவ்வொரு செயலின் மீதும் அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நமக்கு மிகுந்த விழிப்புணர்வு தேவை. எந்தவொரு செயலின் உடனடி விளைவுகளை மட்டுமே நம்மால் அனுமானிக்க முடியும் என்பதால், அது தொடர்ச்சியான விளைவின் ஒரு பகுதிதான் என்பதையும் அதன் இறுதியான விளைவை நம்மால் அனுமானிக்க முடியாது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதுவே இக்கட்டுரை வலியுறுத்தும் விழிப்புணர்வாகும். இந்த விழிப்புணர்வுடன் கூடிய வாழ்க்கையையே ஜென் வலியுறுத்துகிறது என்பதையும் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

எனவே, விழிப்புணர்வுடன் இருக்கும் ஒருவனால் நன்மையும் செய்ய முடியாது; தீமையும் செய்ய முடியாது. அவனால் முடிந்ததெல்லாம் விழிப்புணர்வுடன் செயல்படுவது மட்டுமே.

இப்போது தொடக்கத்தில் நாம் கண்ட இரு வாசகங்களை இக்கட்டுரையின் முடிவிலிருக்கும் நாம் இப்படியாக மாற்றிக் கொள்வோம்.

விழிப்புணர்வோடு சிந்திப்போம்; விழிப்புணர்வோடு செயல்படுவோம்; நல்லதே நமக்கு நடக்காவிட்டாலும் கூட.


.


'நல்லதே நினை; நல்லதே செய்; நல்லதே நடக்கும்'

இது நான் முன்பு பணிபுரிந்த எங்கள் துறையின் தலைமையலுவலகத்தின் நுழைவாயிலில், வெளியேறும்போது கண்ணில் படும்படி எழுதிவைக்கப்பட்டிருக்கும் ஒரு வாசகம். நேர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருக்கும் இது, நான் பணிசேர்ந்த ஆரம்ப நாள்களில் என்னை மிகவும் ஈர்ப்பதாக இருந்தது. நாள்தோறும் தவறாமல் இதை வாசித்துக் கொண்டிருந்த எனக்குத் திடீரென ஒருநாள் இவ்வாசகத்தைக் கட்டுடைக்கும் ஆவல் தோன்றியது. முதல்நோக்கிலேயே எல்லோரையும் ஈர்த்துவிடும் இவ்வாசகம் உண்மையில் என்ன சொல்கிறது என்பதை நான் கட்டுடைத்த பின்னணியைத் தற்போது உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

அதற்கு முன்பாக 'கட்டுடைத்தல்' என்றால் என்ன என்பது பற்றி ஒரு சிறிய அறிமுகம். பலரும் இதை அறிந்திருக்கக் கூடும் என்றாலும் அறியாதவர்களுக்காக மட்டும் இவ்வறிமுகம்.

ஆங்கிலத்தில் De-construction எனப்படும் கட்டுடைத்தல் என்னும் கருத்தாக்கம் ழாக் தெரிதா (1930-2004) என்ற பிரெஞ்ச் சிந்தனையாளரால் தோற்றுவிக்கப்பட்டது. இவர் பின்நவீனத்துவத்தின் தொடக்க காலச் சிந்தனையாளர் ஆவார். பின்நவீனத்துவ எழுத்தாளரான எம்.ஜி.சுரேஷ் இதை நிர்-நிர்மாணம் என்கிறார். வேறு சிலர் தகர்ப்பமைப்பு என்றும் கட்டவிழ்ப்பு என்றும் சொல்கிறார்கள். நாம் இங்கே கட்டுடைத்தல் என்றே கூறுவோம். காரணம், கட்டு என்பது அடிமைத் தளையையும் குறிப்பதால் அதை உடைத்தல் என்ற இன்னொரு பொருளும் இதில் தொனிப்பதால் இதையே நாம் தெரிவு செய்வோம். இக்கட்டுரையின் இறுதியில் இத்தெரிவின் நியாயத்தை, முழுமையை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் எனவும் நம்புகிறேன்.

ஒரு கட்டடம் எவற்றால் கட்டப்பட்டிருக்கிறது என்பதை அறிய (பொதுவாக நாம் அறிந்திருப்போம் என்றாலும், அதை ஐயத்திற்கிடமின்றி நிறுவ) அக்கட்டடத்தைத் தகர்க்க வேண்டும். அவ்வாறே, மொழியில் ஒரு உரையாடலின் உண்மையான உள்ளர்த்தத்தை அறிய அவ்வுரையாடலையும் தகர்க்க வேண்டும். இதைத்தான் கட்டுடைத்தல் என்ற பின்நவீனத்துவ, பின் அமைப்பியல் சொல்லாடலாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது கட்டுடைப்பைத் தொடங்குவோம்.

'நல்லதே நினை; நல்லதே செய்; நல்லதே நடக்கும்'

கட்டுடைத்தலின் முதற்படியாக இதன் வாக்கிய அமைப்பைச் சற்றே கவனிப்போம்.

இதன் முதல் பகுதி
'நல்லதே நினை' - இது ஒரு ஏவல் அல்லது கட்டளை வாக்கியம்.

அடுத்த பகுதி
'நல்லதே செய்' - இதுவும் ஒரு ஏவல் அல்லது கட்டளை வாக்கியம்.

கடைசி பகுதி
'நல்லதே நடக்கும்' - இது ஒரு நேர்மறை வாக்கியம்.

ஆக, இரண்டு ஏவல் வாக்கியங்களையும், ஒரு நேர்மறை வாக்கியத்தையும் ஒருங்கே கொண்டிருக்கும் இவ்வாசகம் ஒட்டுமொத்தத்தில் இலக்கணப்படி ஒரு தொடர்வாக்கியம் ஆகும்.

இப்போது இதிலுள்ள இரு ஏவல் வாக்கியங்களின் மீது நமது கேள்விகளை எழுப்புவோம்.
  1. ஏவுபவர் யார்? (தன்மை)
  2. ஏவப்படுபவர் யார்? (முன்னிலை)

இதில் முதல் கேள்விக்கான பதிலைக் கண்டடைய, 'யாரால் ஏவ முடியும்?' என்ற துணைக் கேள்வியை நாம் எழுப்பிக் கொள்வது நல்லது. அதிகாரம் தொழிற்படும் ஒரு அமைப்பில் அதிகாரத்தின் மேல்நிலையில் உள்ள ஒருவர் அதிகாரத்தின் கீழ்நிலையில் உள்ள ஒருவரை அல்லது அதிகாரமற்ற ஒருவரை ஏவ முடியும் என்பதாக இதற்கு நாம் பதில்காண முடியும். காட்டாக, ஒரு அரசமைப்பில், அரசின் உயர்நிலையில் இருக்கும் பிரதமர் அல்லது குடியரசுத் தலைவர் (இது நாட்டுக்கு நாடு மாறுபடும்) தனக்குக் கீழேயுள்ள அமைச்சர்களையும், அமைச்சர்கள் தங்களுக்குக் கீழேயுள்ள அலுவலர்களையும், அவ்வலுவலர்கள் அவர்களுக்குக் கீழேயுள்ள இதர அலுவலர்களையும் ஏவ முடியும். இது அவ்வமைப்பின் கடைநிலை ஊழியரில் முடியும்.

இவ்வாறே, இது மாநில அரசுகள், துறைகள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் என அதிகாரம் தொழிற்படும் அனைத்து இடங்களுக்கும் பொருந்தும். இது குடும்பம் என்ற அமைப்பிற்கும் பொருந்தும் என்றாலும், குடும்ப உறுப்பினர்களுக்குள் ஓர் உறவு கட்டமைக்கப்பட்டிருப்பதால் இந்த ஏவல் என்பது அவ்வப்போது சூழலுக்கேற்ப மாறும் தன்மையுடையது என்பதை நாம் வேறுபடுத்தி அறிந்து கொள்ள வேண்டும்.

எனவே, பொதுவாக இந்த ஏவல்கள் அதிகாரத்தில் மேல்நிலையில் உள்ளவர்களால் அதிகாரத்தின் கீழ்நிலையில் உள்ளவர்கள் அல்லது அதிகாரமற்றவர்கள் மீது ஏவப்பட்டிருப்பதாக நாம் புரிந்து கொள்ளலாம்.

மேலும், இவ்வாக்கியங்களிலுள்ள 'நல்லதே' என்ற சொல்லின் ஈற்றிலுள்ள ஏகாரம், நல்லதைத் தவிர்த்த மற்றதை அதாவது தீயதையும் மறைபொருளாகக் குறிப்பிடுகிறது. அது, 'தீயதைச் செய்யாதே', 'தீயதை நினையாதே' என்ற மேலுமிரு ஏவல்களையும் குறிப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். அதாவது, 'நல்லது செய்', 'நல்லது நினை' என்று ஏவாமல், 'நல்லதே செய்', 'நல்லதே நினை' என்று ஏவுவதன் மூலம் 'தீயதைச் செய்யாதே', 'தீயதை நினையாதே' என்பவற்றையும் மறைமுகமாக ஏவுவதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

இப்போது வாசகத்தின் இறுதிப் பகுதியான 'நல்லதே நடக்கும்' என்பதைக் கட்டுடைப்போம். முன்னர்க் குறிப்பிட்டது போல இவ்வாக்கியத்திலும் 'நல்லதே' என்ற சொல்லின் ஈற்றிலுள்ள ஏகாரம், நல்லது மட்டுமே நடக்கும் என உறுதியளிக்கிறது. மேலும், தீயதைச் செய்தால், தீயதை நினைத்தால் தீயதே நடக்கும் எனவும் மறைமுகமாக எச்சரிக்கிறது.

இப்போது இவ்வாசகம் குறிப்பிடும் நல்லது, தீயது குறித்துச் சிந்திப்போம். இவ்வாசகத்தின்படி எது நல்லது, எது தீயது, யாருக்கு நல்லது செய்ய வேண்டும், யாருக்குத் தீயது செய்யக் கூடாது என்ற கேள்விகளை எழுப்பும்போது, நல்லது செய்வது என்பது நாம் எந்த அதிகார அமைப்பில் இருக்கிறோமோ அவ்வமைப்பின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, அவ்வமைப்புக்கெதிராக எதுவும் நினையாதிருப்பது, பேசாதிருப்பது மற்றும் செய்யாதிருப்பது எனப் புரிந்து கொள்ளலாம். அவ்வாறே, தீயது செய்வது என்பது அவ்வதிகார அமைப்பின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படாமல், அவ்வமைப்பைக் குலைக்க முயலுவது, எதிர்ப்பது, கலகம் செய்வது மற்றும் புரட்சி செய்வது என்றும் புரிந்து கொள்ளலாம்.

ஆக, ஒரு அதிகார அமைப்பு இதுபோன்ற நன்னெறி வாக்கியங்கள் என நம்பப்படும், தனது அதிகார குரல் ஒலிக்கும் ஏவல் வாக்கியங்களைத் தொடர்ந்து பரப்புரை செய்வதன் மூலம் அவ்வமைக்குட்பட்டவர்களை, அவ்வமைப்புக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கிறது. அதற்குப் பதிலாக சில வெற்று வாக்குறுதிகளைப் பரிசாக அவர்களுக்குத் தரும் அவ்வமைப்பு எதிர்ப்பவர்களைத் தண்டனைக்குள்ளாக்கவும் செய்கிறது.

இப்போது ஒரு சிலர் மனத்தில் தோன்றலாம், இது என்ன அபத்தமென்று. நல்லதைச் செய்வதையும் நினைப்பதையும் நிறுத்திவிட வேண்டுமா என்றும் அவர்கள் கேள்வியெழுப்பலாம். நல்லது செய்வது தொடர்பான மாற்றுச் சிந்தனையை அடுத்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

'நல்லதே நினை; நல்லதே செய்; நல்லதே நடக்கும்' எனச் சொல்வதில் என்ன தவறிருக்க முடியும் என்று இன்னமும் நினைப்பவர்களுக்காக இந்த வாசகம் எப்படியிருக்க வேண்டும் என்று இப்போது பார்ப்போம்.

'நல்லதே நினைப்போம்; நல்லதே செய்வோம்; நல்லதே நடக்கும் என்று நம்புவோம்'

இந்த வாசகத்தைக் கவனியுங்கள். இதில் ஏதாவது ஏவல் தொனி தெரிகிறதா? இல்லவே இல்லை. ஏதேனும் அதிகாரப் படிநிலையை உங்களால் உய்த்துணர முடிகிறதா? வாய்ப்பே இல்லை. காரணம், இதில் சொல்பவன், யாருக்குச் சொல்லப்படுகிறதோ அவர்களோடு ஒன்றிணைந்து விடுகிறான். அதிகாரம் தகர்க்கப்பட்டு சமனிலை நிறுவப்படுகிறது. மேலும், இவ்வாசகம் சமத்துவத்திற்கான அழைப்பாகவும் இருக்கிறது. அது நல்லதே நடக்கும் என்று எந்தவொரு வெற்று வாக்குறுதியையும் அளிக்கவில்லை. மாறாக, நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை விதையைத் தூவுகிறது. அந்த நன்மையும் எந்த ஒரு அதிகார அமைப்புக்கான நன்மையாகவும் இல்லை. அது எனக்கான நன்மையைச் சொல்கிறது; உங்களுக்கான நன்மையைச் சொல்கிறது; மொத்தத்தில், ஒட்டுமொத்த மனிதச் சமூகத்தின் நன்மைக்கான அறைகூவலாய் அது இருக்கிறது.

ஆகவே, ஆளும் அதிகார வர்க்கத்தினரின் ஏவல் நன்னெறி வாக்கியங்களிலிருந்து எச்சரிக்கையுடன் விலகியிருப்போம். அவற்றின் அதிகாரத் தொனியைக் கட்டுடைத்து சமத்துவமான புதிய சொல்லாடல்களைக் கட்டுவோம்; மாற்றிச் சிந்திப்போம்.

.



அறிமுகம்:

'இருட்டு என்பது மிகக்குறைந்த அளவு ஒளி; ஒளி என்பது மிகக்குறைந்த அளவு இருட்டு' என்ற எளியதோர் மாற்றுச் சிந்தனையோடு இக்கட்டுரையைத் தொடங்குவோம்.

முதலில், மாற்றுச் சிந்தனை என்றால் என்ன என்பதைச் சற்றே புரிந்து கொள்ள முற்படுவோம். மாற்றுச் சிந்தனை என்றால் எதற்கு மாற்று என்ற கேள்வியின் வழியே முன்பே ஒரு சிந்தனை இருப்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். அதை நாம் இங்கே மரபார்ந்த சிந்தனை எனக் குறிப்பிடுவோம்.

எந்த ஒரு சிந்தனையாக இருந்தாலும், அது முதலில் ஒரு தனி மனிதனிடமிருந்தே தொடங்குகிறது. பின்னர் அதன் சாதக, பாதகங்களைப் பொருத்து அது ஒரு சிறிய குழுவாலோ, பெருங்கூட்டத்தாலோ தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு அது ஒரு மரபார்ந்த சிந்தனையாகப் பரிணமிக்கிறது. இந்தச் சிறிய குழு அல்லது பெருங்கூட்டம் என்பதை நாம் ஒரு இனக்குழு, சாதி அல்லது மதம் சார்ந்த ஒரு சமூகம் அல்லது வெவ்வேறு கலாச்சார, பண்பாட்டுச் சமூகங்கள் என்ற விரிந்த தளங்களில் பொருள் கொள்ளலாம். இப்படியாக ஒரு மரபார்ந்த சிந்தனை முறை வெவ்வேறு (சமூக)மனிதர்களிடம் வெவ்வேறாகக் கட்டமைக்கப்பட்டுப் பின்பற்றப்பட்டு வருகிறது.

வரலாற்றின் வெவ்வேறு காலக்கட்டங்களில் இந்த மரபார்ந்த சிந்தனை முறைகளுக்கெதிராகச் சிந்தித்து புதிய வரலாறு படைத்த மாமனிதர்களை நாமறிவோம். அந்த மாமனிதர்களைக் குறித்து இக்கட்டுரையில் நான் ஏதும் சொல்லப் போவதில்லை. நான் செய்யப் போவதெல்லாம் நான் அறிந்த சில மாற்றுச் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதுதான்.

இன்னும் சிந்திப்போம்...